நான் வலைப்பதிவுலகில் நுழைந்தே நான்கு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் கூட தொடர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன் (பின்னூட்டங்கள் கிடைக்காவிட்டால் கூட!!) . பதிவர்கள் சந்திப்பிற்காக கிழக்கு பதிப்பக மாடியில் நுழைந்தபோது கோவி.கண்ணன் வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பத்ரி, லக்கிலுக், டாக்டர் ப்ரூனோ , நரசிம் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
வட்டவடிவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பித்தன. பேச்சு முதலில் ராதாகிருஷ்ணனின் நாடக அனுபவங்களில் இருந்து தொடங்கியது. நாடகம் வழக்கொழிந்து கொண்டிருப்பதற்கான காரணத்தை அலசியபோது...நாடகங்களை திரைப்படங்களாக எடுத்தது ஒரு காலம்...பின்னால் வந்த பாரதிராஜா போன்றவர்கள் திரைப்படங்களை கிராமங்களுக்கே கொண்டு சென்று இயல்பாக திரைப்படம் எடுக்கும் வித்தையைக் காட்டத் தொடங்கியபின் திரைப்படத்தில் கூட சம்பிரதாயமாக வரும் காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்ட விதம் ரசிகர்கள் எந்த அளவிற்கு நாடகங்களை விட்டு விலகிப் போய்விட்டார்கள் என்பதற்கு சாட்சி என்று என் கருத்தை சொன்னேன்.
பேச்சு சுனாமி பற்றி திரும்பியது. பத்ரி சுனாமி தகவல் கிடைத்தவுடன் போட்டது போட்டபடி அவர்களுக்கு மருத்துவ சேவை செய்ய ஓடிய மருத்துவர்களை பாராட்டினார்.
வாசகர் கோவில்பட்டி அருண் தன் வேலை நேற்றே முடிந்துபோய்க் கூட இந்த சந்திப்பிற்காக சென்னையில் இருந்திருக்கிறார்...செல்போன் தயாரிப்பில் நோக்கியாவையும் உள்ளே விட்டு.... சீனத் தயாரிப்புகளையும் மார்க்கெட்டில் குவிக்கும் வியாபார விளையாட்டுகளை விலாவாரியாக கிழித்துப் போட்டார். லட்சுமி, பாலபாரதி அவர் கூற்றை ஒப்புக்கொள்ளவில்லை....
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்த முறை (செலவுக்கு நிறைய காசு இருந்து கூட) சரியாக விளம்பரம் செய்யவில்லை என்று பத்ரி குறைப்பட்டார்...அதிஷா சாக்லேட் விநியோகம் செய்தார் (நல்ல பாரின் சாக்லேட், வாயில் கரைந்தது) குளிர்பானங்களும் விநியோகிக்கப்பட்டது..
சென்னை சங்கமம் பற்றிய விவாதத்தில் சென்னை கர்நாடக இசை விழாக்களைப் போல இந்த கிராமிய விழாவிற்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெரும் அளவில் ஸ்பொன்சர் செய்ய வேண்டும் என்று என் கருத்தைத் தெரிவித்தேன்..
இஸ்மாயில் சுனாமி முன்னெச்சரிக்கை முறை பற்றியும், மத நல்லிணக்கத்தைப் பற்றியும் நியாயமான கவலைப்பட்டார்....கொஞ்சம் இஸ்ரேல் விவகாரமும் சீண்டிப் பார்க்கப்பட்டது...
பாக் டு ஸ்கொயர் ஒன் என்பது போல் திரைப்பட விவாதம் தொடங்கியது.. இயக்குனர் சண்முகப்பிரியன், கேபிள் ஷங்கர், அக்கிநிப்பார்வை, வெண்பூ, அசன் அலி போன்றவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள்..என்னுடைய கொழும்பு திரைப்பட வர்த்தக அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன்...
சந்திப்பு இனிதே நிறைவுற அனைவரும் எல்டாம்ஸ் தெரு முனையில் தேநீர் பருகினோம்..புரூனோ சத்யம் ராஜுவின் கேப்மாறித் தனங்களைப் புட்டு வைத்தார்... அனைவரும் கை குலுக்கி விடைபெற்றோம்...மனத்துக்கு ஆனந்தமும், நிம்மதியும் தந்த அருமையான சந்திப்பு...அனைவருக்கும் நன்றி.....
(நண்பர்கள் நிறைய புகைப்படம் எடுத்தார்கள்...அவர்களது வலைப்பக்கங்களில் பதிவிடுவார்கள் என்று நம்புகிறேன்)
Subscribe to:
Posts (Atom)