திரைத்துறையில் வர்த்தகம்

நான் பொதிகை அலைவரிசையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தபோது திரைத்துறையில் வர்த்தகம் எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்று நேயர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய வெறியை என்னுள் உருவாக்கிய சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.

இப்போது இலங்கையைப் பற்றி நிறையக் கதைக்கிறவர்கள் கி.பி இரண்டாயிரம் ஆண்டு வாக்கில் இலங்கையை வரைபடத்தில் பார்க்கக் கூட பயந்தவர்கள் தான் என்பது என் அபிபிராயம். அந்தக் காலகட்டங்களில் கொழும்புவின் ஒவ்வொரு சதுர அடியையும் கால் நடையாகவே சுற்றித் திரிந்து ஐ.தி.என், சுவர்ணவாகினி, ரூபவாகினி, தேசிய திரைப்படக் கழகம் போன்ற நிறுவனங்களுக்கு தமிழ் திரைப்படங்களின் அலைவரிசை ஒலிபரப்பு உரிமையை விற்றுக்கொண்டிருந்த நான் அதற்காக இங்கே சென்னையில் அது சம்பந்தமான காபி ரைட் உரிமையாளர்களை சந்திக்க எனக்கு உதவிசெய்தவர்களில் அண்ணன் மீடியேட்டர் சிவஞானம் அவர்கள் முக்கியமானவர். அப்படி அவரை என் பைக்கில் உட்காரவைத்து எப்.எம்.எஸ் யாகியா பாய் அவர்களை சந்திக்க சென்று கொண்டிருந்த சமயத்தில் சிவஞானம் அண்ணன் திடீரென்று "ஏண்டி முத்தம்மா எது புன்னகை" என்ற பாடலை உரக்கப் பாட ஆரம்பித்தார். (அண்ணன் சாயங்கால வேளைகளில் கொஞ்சம் சுருதி கூட்டுவது வழக்கம்) என்ன அண்ணே இன்னைக்கி சுருதி கொஞ்சம் ஓவரோ என்று சற்றே கிண்டலுடன் கேட்ட என்னை வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டச் சொன்ன அவர் ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு ஆரம்பித்தார். தம்பி கணேசு இந்தப் பாடு எந்தப் படம் என்றார். ஆறு புஷ்பங்கள் என்றேன் நான். அப்படிச் சொல்லாத தம்பி இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஆறுபுஷ்பங்கள் என்று சொல்லு தம்பி என்றார். சரி அதுக்கு இப்போ என்ன என்றேன் சற்று எரிச்சலுடன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் தம்பி என்றார் உடைந்த குரலுடன். நான் சூழ்நிலையை மறந்து அங்கேயே அழ ஆரம்பித்து விட்டேன்.(padaththin தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ். திருமால் endru பின்னர் உறுதி செய்துகொண்டேன், அண்ணன் சுருதியில் இருந்ததால் படத்தை மாற்றிச் சொன்னாரோ அல்லது பொய் சொன்னாரோ தெரியவில்லை எது எப்படியோ எனக்கு மிக முக்கியமான கடமையை தந்தார்)கோயம்புத்தூரில் விசைத்தறி நடத்திய அண்ணனை அங்கே சூட்டிங் நடத்த வந்த யாரோ இயக்குனர் பட ஆசை காட்டி சிங்காரச் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். இங்கே வந்த அண்ணனோ திரைப்பட வியாபாரத்தைப் பற்றி ஒன்றுமே புரிஞ்சு கொள்ளாமல் பணம், வியாபாரம் எலாவற்றையும் தொலைத்துவிட்டு அதே சினிமாவில் அனைவரையும் அண்ணே அண்ணே என்று கைகூப்பி மீடியேட்டராக மாறி வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருககிறார் என்று புரிந்துகொண்டு அங்கேயே திரைத்துறையில் வர்த்தகம் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய என் கடமையை சூளுரைத்துக் கொண்டேன். அதற்காக திட்டமிட்டு கலைப்புலி சேகரன் அவர்களையும், மற்ற திரை வர்த்தக துறை வித்தகர்களையும் சந்தித்து பேட்டியெடுத்த என் மக்கள் மன்ற நிகழ்ச்சியான திரைத்துறையில் வர்த்தகம் எனக்கு பெரிய மன நிம்மதியையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.