சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பாரதி திருவிழாவில் நான் வாசித்த கவிதை

சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பாரதி திருவிழாவில் நான் வாசித்த கவிதை
 (மிகச்சிறப்பான டிபன், லஞ்ச், கவியரங்கத்தில் கவிதைவசித்த அனைவருக்கும் பொன்னாடை (அது இரண்டு வரியாக இருந்தாலும் சரி, இரண்டு கிலோவாக இருந்தாலும் சரி)

தலைப்பு : அல்லிக்கேணிக் குளத்தருகே உனைக்கண்டு அளவளாவ மாட்டேனோ?



நெல்லைச் சீமையிலே

கூடங்குளத்திற்கு கொள்ளைக்காலத்திற்கு முன்பே

எட்டையபுரத்தில் எகிறிக்குதித்த அணுவுலை பாரதி

அவன் கவிதைக் கதிர்வீச்சு பரங்கியைப் பஸ்பமாக்கியது

காதல் கதிர்வீச்சோ பாப்பன அக்கிரகாரங்களையே

அவனைப் பகிஷ்கரிக்கவைத்தது



பாரதி...அவன் பார்வை தீ..

படிப்பவர்களை அடிமைகளாக்கும் ரதி..

தமிழில் அவன் பாதி

விட்டுச் சென்றது தான் மிச்சம் மீதி

அதிலும் எம்போல் எச்சம் கோடி.....



வெள்ளையனின் பியூசைப் பிடுங்கிய

இந்த மீசை

விடுதலை வீரர்களைக்

கவிதையால் இணைத்த

காலத்திற்கு முந்திய இணையதளம்



விடுதலை, வீரம், காதல்

கடவுள், குழந்தைகள், குயில் எனப்

பல்சுவை படைப்புகள் தந்த

பண்டைய செயற்கைக்கோள் தொலைகாட்சி



அல்லிக்கேணி முதல் அடையார் வரை

குதிரை ரதத்திற்குக் கூட வழியில்லாத குமைச்சலில்

அவன் ஓட்டிய ஞானரத ரூட்டில் தான்

இன்றைய வானரதம் பறக்கும்ரயில் பறக்கின்றது



வாழும் வரையில்

வயிற்றுக்கு ஒரு தம்பிடிகூடக் கொடுக்காமல்

வாய்க்கரிசிபோட்டுவிட்டு

வயசுப் பெண்டுகள் வரன்பார்க்கும் நிகழ்ச்சிகளில் மட்டும்

பாரதி பாட்டு ரெண்டு பாடு என

வாய்கூசாமல் கேட்க்கும் இந்த

வக்கற்ற வர்க்கத்தை என்ன செய்வது,,,,



கரிராஜன் கால்களில்

கவிராஜன் இடறுண்டு

காலனிடம் சென்று சேர்ந்த

கதை பொய்யாய்ப் போகாதோ

அல்லிக்கேணிக் குளத்தருகே உன்னை

அனுதினமும் கண்டு நான்

அளவளாவ மாட்டேனோ?