எம்.எஸ்.வியின் ஹை-வே இசையும், கவியரசரின் கண்ணீர் வரிகளும்

நாற்பத்தியேழு நாட்கள் என்று ஒரு படம். அதிகம் படிப்பறிவில்லாத ஒரு அபலைப் பெண் ஏற்கனவே மணமான ஒரு வெளிநாடு வாழ் தமிழனால் ஏமாற்றி தாலி கட்டப் பட்டு பாரீசில் படாத பாடு பட்டு ஒரு நல்ல மனிதனால் காப்பாற்றப் பட்டு தமிழ் நாடு திரும்புவதாகக் கதை (சிவசங்கரியின் கதை). தான் ஏமாற்றப் பட்டதை முற்றிலும் புரிந்து கொண்டு பாரீசிலிருந்து எப்படியாவது தப்பி தமிழ் நாடு வந்து சேரவேண்டும் என்று வழி தெரியாமல் பாடாய்ப் படும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும் (மான் கண்ட சொர்க்கங்கள், காலம் போகப் போக யாவும் வெட்கங்களே). mellisai மன்னர் இசை அமைத்து கவியரசர் எழுதிய அந்தப் பாடல் இசையிலும் வரிகளிலும் காலத்தை வென்ற ஒரு படைப்பாகும். அந்தக் காலகட்டத்தில் தான் தாள வாத்தியக் கருவியான ரோட்டோ என்ற ஒரு ட்ரம்ஸ் வாத்தியக் கருவி அறிமுகமாகியிருந்தது. ஏழெட்டு வட்டவடிவமான ட்ரம்ஸ் கருவிகள் வரிசையாகப் பொருத்தப்பட்டு (இப்போதைய கம்ப்யூட்டர் ரிதம் பெடிற்கு மானுவல் thaththaa athu) anthak கருவியை மட்டும் தாள vaaththiyap பின்னணியாக வைத்து மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார் அந்தப் பாடலில். அனேக வெளிநாடு வாழ் தமிழர்கள் இப்போதும் அங்கே ஏதாவது ஹை வேக்களில் காரில் இந்தப் பாடலை ஓடவிட்டால் எப்படி ஐயா மெல்லிசைமன்னர் இப்படி ஒரு கருவி இசை இந்தப் பாடலுக்கு அமைத்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எழும். திக்குத் தெரியாமல் பாஷை தெரியாத வெளிநாட்டில் கலங்கித் தவிக்கும் அபலைப் பெண்ணின் மனவோட்டமாக வரும் அந்தப் பாடலில் கண்களை கண்ணீர்க் கடலில் மூழ்கடிக்கும் ஒரு வரியை எழுதியிருப்பார் கவியரசர். "தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது" என்ற அந்த வரியில் நமது கள்ளமில்லாத் தாய்மார்கள் தமது குழந்தைகளுடன் கோவிலுக்குச் செல்வதும் அவர்களுக்கு சாமி கதைகளைச் சொல்லி பிரச்சனைகள் வரும் போது நம் குலதெய்வத்தை மனத்தால் கூப்பிடு உதவிக்கு ஓடிவரும் என்று நம்பிக்கை ஊட்டுவதும் நம் கண் முன்னே வரும். நான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபப் பட்டதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ததில்லை. ஆனாலும் இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் அவர்கள் நினைவு என் நெஞ்சை அழுத்தி கண்களில் கண்ணீர் தெறிக்கும் என்பது மட்டும் உண்மை.