சென்னை புத்தகக் கண்காட்சியில் சாக்கடை
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். நூற்றுக்கணக்கான புத்தகக் கடைகளில் எத்தனையோ புத்தகங்கள். தமிழ்த்தாத்தா இருந்திருந்தால் ட்ரக்குகளில் புத்தக லோடு எடுத்திருப்பார். அரங்கத்தினுள் இருப்பது அறிவின் கருவூலம், தேடி வரும் வாசகர்களோ அறிவைக் கொள்முதல் செய்ய ஓடோடிவரும் ஆர்வத் திருவுருக்கள் . ஆனால் கூடப் பாருங்கள் அரங்கத்தை ஒட்டி அறிவுக்கு உணவோடு, வயிற்றுக்கும் ஈவதற்காக அமைக்கப்பட்டுள்ள உணவரங்கத்தில் தரம் நிறைவாக இருந்தது. விலை காலத்தின் கட்டாயத்தால் நுகர்வோரை சிலையாக்கினாலும், கூட்டத்திற்கும், விற்பனைக்கும் ஒரு குறைவும் இல்லை. எதற்கு இவ்வளவு நீட்டி முழக்குகிறேன் என்றால் , சாப்பிடு முன்னும் சாப்பிட்ட பின்னும் கை கழுவி வாய் கொப்பளிக்க வேண்டுமல்லவா, அட ஆண்டவனே , சமூகத்தில் ஒரு பிரச்சனை என்றால் வானுயர வார்த்தையால் குதிக்கும், பேனா என்ற லத்தியை சுழற்றும், சமூகக் காவலர்களான எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய விஷயமா அது? சாதாரண கல்யாண விருந்துகளில் கூட ஒரு தற்காலிக வாஷ்பேசின் வைத்து கழிவுநீரை முறையாய் வடிகால் செய்யும் காலம் இது. ஆனால் பாருங்கள் புத்தகக் கண்காட்சி பொறுப்பாளர்களோ, அதன் உறுப்பினர்களான பதிப்பகத்தார், எழுத்தாளர்கள் (ஆன்மீக அருளாளர்கள் மட்டும் ஐந்தாறு பேர்கள் இருக்கிறார்கள்) யாருமே கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அல்லது கவலைப்படாமல் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளின் படி , டிரம்களில் இருந்து நேரடியாக குவளை மூலமாகக் கழுவிக் கொட்டப்படும் கழிவுநீர், அங்கேயே தேங்கி ஒரு மினி கூவத்திற்கு இணையான தெய்வீகமணத்தை பரவச்செய்து அதைப்பற்றி கவலைப்படாமல் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் நூற்றுக்கணக்கானவர்களின் மரத்துப் போன உணர்ச்சிகளைப் பார்த்து மவுனமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நம்மால் மற்றவர்கள் போல் இருக்கமுடியவில்லை என்பதால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் "ஒ" போடும் எழுத்தாளர் ஞானி ஐயா அவர்களைப் பார்த்து " ஐயா ஊர் கூடி இலக்கியத்தேர் இழுக்கிறீர்கள் ஆனால் இந்த அவலத்தையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றேன். அதை ஒப்புக்கொண்ட அவர் தானும் அதைக் கவனிப்பதாகவும் பாபாசி (கண்காட்சி நடத்துனர்) நிர்வாகிகளிடமும் புகார் செய்யவும் என்று கூறினார். அதன் படியே செய்துவிட்டு வந்தேன். அடுத்த சில நாட்களில் போய்ப் பார்த்தால் தெரியும் இவர்கள் மீதி சமூகப் பிரச்சனைகளில் காட்டும் அக்கறை உண்மையா இல்லையா என்று.
Posted by
படித்துறை.கணேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment