ராசீவ் மரணமும் விதியின் விளக்கமும்

விதியை நம்பும் அன்பர்களுக்கான் பதிவு இது அல்ல. ஆனால் விதியை நம்பாத மதியாளர்களுக்கு இந்த விஷயம் ஒரு இயல்பான நிகழ்வாகத் தோன்றினாலும் என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை? சரி விஷயத்திற்கு வருவோம்......

இந்திராகாந்தியின் புதல்வர்கள் இருவர். சஞ்சய்காந்தி மற்றும் ராசீவ்காந்தி...இதில் இந்திராவின் அரசியல் வாரிசாக ஒரு பெரும் சக்தியாக வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டவர் சஞ்சய் . சராசரி குடும்பத்தலைவனாக வாழ்வை கழிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ராசீவ்.

அரசியலில் அண்ணன் அழகிரி போல் அதிரடியான ஆளான சஞ்சய் காந்திக்கு பொது வாழ்வின் விதிப்படி எதிரிகள் அதிகம் உருவாகவும் அதன் மூலம் அவருக்கு மரணம் வாய்க்க கண்டிப்பாக பல சந்தர்ப்பங்கள் உண்டு. அதேபோல் ஆகாய விமானியாகப் பணியாற்றிய ராசீவிற்கு அவர் தொழிலில் உள்ள இயல்பான ஆபத்துகளின் படி ஆகாய விமான விபத்தில் உயிர்விட பல்வேறு வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பாருங்கள் அரசியல்வாதியாக இருந்த சஞ்சய் காந்தி ஆகாய விமான விபத்தில் மரணமடைகிறார்.... சம்பந்தமே இல்லாமல் அரசியல்வாதியான ஆகாய விமானி ராசீவ் காந்தி அரசியல் காரணங்களுக்காக உயிர்விடுகிறார்... இரண்டு பேர்களும் ஒரேகுடும்பத்தில் ....அதுவும் அண்ணன் தம்பிகள்....இதைத் தான் விதி என்பதோ....

சென்னை புத்தகக் கண்காட்சியில் சாக்கடை

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். நூற்றுக்கணக்கான புத்தகக் கடைகளில் எத்தனையோ புத்தகங்கள். தமிழ்த்தாத்தா இருந்திருந்தால் ட்ரக்குகளில் புத்தக லோடு எடுத்திருப்பார். அரங்கத்தினுள் இருப்பது அறிவின் கருவூலம், தேடி வரும் வாசகர்களோ அறிவைக் கொள்முதல் செய்ய ஓடோடிவரும் ஆர்வத் திருவுருக்கள் . ஆனால் கூடப் பாருங்கள் அரங்கத்தை ஒட்டி அறிவுக்கு உணவோடு, வயிற்றுக்கும் ஈவதற்காக அமைக்கப்பட்டுள்ள உணவரங்கத்தில் தரம் நிறைவாக இருந்தது. விலை காலத்தின் கட்டாயத்தால் நுகர்வோரை சிலையாக்கினாலும், கூட்டத்திற்கும், விற்பனைக்கும் ஒரு குறைவும் இல்லை. எதற்கு இவ்வளவு நீட்டி முழக்குகிறேன் என்றால் , சாப்பிடு முன்னும் சாப்பிட்ட பின்னும் கை கழுவி வாய் கொப்பளிக்க வேண்டுமல்லவா, அட ஆண்டவனே , சமூகத்தில் ஒரு பிரச்சனை என்றால் வானுயர வார்த்தையால் குதிக்கும், பேனா என்ற லத்தியை சுழற்றும், சமூகக் காவலர்களான எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய விஷயமா அது? சாதாரண கல்யாண விருந்துகளில் கூட ஒரு தற்காலிக வாஷ்பேசின் வைத்து கழிவுநீரை முறையாய் வடிகால் செய்யும் காலம் இது. ஆனால் பாருங்கள் புத்தகக் கண்காட்சி பொறுப்பாளர்களோ, அதன் உறுப்பினர்களான பதிப்பகத்தார், எழுத்தாளர்கள் (ஆன்மீக அருளாளர்கள் மட்டும் ஐந்தாறு பேர்கள் இருக்கிறார்கள்) யாருமே கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அல்லது கவலைப்படாமல் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளின் படி , டிரம்களில் இருந்து நேரடியாக குவளை மூலமாகக் கழுவிக் கொட்டப்படும் கழிவுநீர், அங்கேயே தேங்கி ஒரு மினி கூவத்திற்கு இணையான தெய்வீகமணத்தை பரவச்செய்து அதைப்பற்றி கவலைப்படாமல் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் நூற்றுக்கணக்கானவர்களின் மரத்துப் போன உணர்ச்சிகளைப் பார்த்து மவுனமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நம்மால் மற்றவர்கள் போல் இருக்கமுடியவில்லை என்பதால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் "ஒ" போடும் எழுத்தாளர் ஞானி ஐயா அவர்களைப் பார்த்து " ஐயா ஊர் கூடி இலக்கியத்தேர் இழுக்கிறீர்கள் ஆனால் இந்த அவலத்தையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றேன். அதை ஒப்புக்கொண்ட அவர் தானும் அதைக் கவனிப்பதாகவும் பாபாசி (கண்காட்சி நடத்துனர்) நிர்வாகிகளிடமும் புகார் செய்யவும் என்று கூறினார். அதன் படியே செய்துவிட்டு வந்தேன். அடுத்த சில நாட்களில் போய்ப் பார்த்தால் தெரியும் இவர்கள் மீதி சமூகப் பிரச்சனைகளில் காட்டும் அக்கறை உண்மையா இல்லையா என்று.
கோழித் திருடனுக்கு
குறைந்த பட்ச
ஜெயில் தண்டனை....
ஜெயிலில்
வாரம் ஒருமுறை
கோழிக்கறி !!

செய்ததாகச் சொன்ன கொலைகள்

இருந்ததாகச் சொன்ன உலைகள்

கடைசி வரை சதாமின் கண்களில் மரணபயம்

எதுவும் கிடைக்கவில்லை அமெரிக்காவிற்கு .....

காளையைக் காயடித்து அடிமாடாக்கினோம்

கதறியது, நமக்கு வலிக்கவில்லை

வெள்ளைக்காரன் விதை நெல்லைக் காயடித்து விற்றால்

வலிக்கிறது கதறுகிறோம்.....

ஓசோன் குடையைக் கிழித்து

ஓசியாய்க் கிடைத்த

காற்றையும் நீரையும்

காசு கொடுத்து அனுபவிப்போம்

வாழ்க மானுடம்.....

யூசர்நேமும் பாசுவேர்டும் போட்டவுடன் - ஒரு கணம்

யோசித்து வாய் நெகிழும் வலைத் தாமரையே

தேடும் கருத்தையெல்லாம் ஓடாமல் ஓரிடத்தில்

பார்க்கத் தந்த உந்தன் பராக்கிரமம் வாழியவே!!!