"சாமியார் தம்பிக்குப் பிடி வாரண்ட்

(தலைப்பைப் பார்த்ததும் ஏதோ இப்போது நடந்த சமாச்சாரம் என்று நீங்கள் குழம்பிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல . இது தந்தைப் பெரியாரால் "என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதி. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்கள் புதியதல்ல எல்லாமே ரிப்பீட்டு தான் என்பது மட்டும் புரிகிறது.)






ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1908 ஆம் வருஷமாய் இருக்கலாம். எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷை (பிட்சை) நடத்துகிறார்கள் என் தகப்பனாரும் ரூபாய் 50 கொடுத்தார் . பெரிய சமாராதனை நடக்கிறது அந்தச்சாமியார் தம்பி ஒரு மைனர். கடன்காரன். அவனும் கூட வந்திருந்தான். அந்த மைனர் எங்கள் ஊரில் ஒரு வியாபாரிக்கு கடன் பாக்கி கொடுக்கவேண்டும். அது கோர்டில் டிக்ரி ஆகி இருந்தது அந்த சமயம் அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய் பிடி போட்டு வாரண்ட் கொண்டு வரச் சொன்னேன். உடனே நிறைவேற்ற விண்ணப்பம் போட்டு அன்றே வாரண்டு வந்தது. மறுநாள் பகல் மணிக்கு வாரண்டு எடுத்துக்கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூடிக்கொண்டு எங்கள் ஊரில் சாமியார் இறங்கியிருந்த "எல்லயப்பர் சத்திரம்" என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்திரத்திற்குப் பக்கத்தில் வெளியில் நான் நின்று கொண்டு சாமியார் தம்பிக்கு ஆள் அனுப்பினேன். உள்ளே இருந்து அவர் ரோட்டுக்கு வந்தார். சேவகனுக்குக் கைகாட்டி "இவர் தான்" என்று சொன்னேன். சாமியார் தம்பி, வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே போனேன். திமிறிவிட்டு சட்டென்று வீட்டுக்குள் புகுந்து வெளிக்கதவைத் தாழிட்டுக்கொண்டான். நான் உடனே தூணைப்பிடித்து தாழ்வாரத்தின் மீது ஏறி ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப்பக்கம் வீட்டிற்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து வீதிக் கதவைத் திறந்து விட்டு சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து சேவகனிடம் ஒப்புவித்தேன். அந்த மைனர் திமிறினான். என் கடை ஆட்கள் சில பேர்கள் அங்கிருந்தவர்களை "இவனைப் பிடித்து வெளியில் தூக்கிக் கொண்டு போங்கள்" என்று சொன்னேன். (அற்புதமான நகைச்சுவை நடையில் இந்தக் கட்டுரையின் மற்ற விஷயங்களையும் அந்த மாமனிதரின் மற்ற மகத்துவம் பொருந்திய கருத்துக்களையும் வாங்கிப் படியுங்கள்)

No comments: