சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பாரதி திருவிழாவில் நான் வாசித்த கவிதை

சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பாரதி திருவிழாவில் நான் வாசித்த கவிதை
 (மிகச்சிறப்பான டிபன், லஞ்ச், கவியரங்கத்தில் கவிதைவசித்த அனைவருக்கும் பொன்னாடை (அது இரண்டு வரியாக இருந்தாலும் சரி, இரண்டு கிலோவாக இருந்தாலும் சரி)

தலைப்பு : அல்லிக்கேணிக் குளத்தருகே உனைக்கண்டு அளவளாவ மாட்டேனோ?



நெல்லைச் சீமையிலே

கூடங்குளத்திற்கு கொள்ளைக்காலத்திற்கு முன்பே

எட்டையபுரத்தில் எகிறிக்குதித்த அணுவுலை பாரதி

அவன் கவிதைக் கதிர்வீச்சு பரங்கியைப் பஸ்பமாக்கியது

காதல் கதிர்வீச்சோ பாப்பன அக்கிரகாரங்களையே

அவனைப் பகிஷ்கரிக்கவைத்தது



பாரதி...அவன் பார்வை தீ..

படிப்பவர்களை அடிமைகளாக்கும் ரதி..

தமிழில் அவன் பாதி

விட்டுச் சென்றது தான் மிச்சம் மீதி

அதிலும் எம்போல் எச்சம் கோடி.....



வெள்ளையனின் பியூசைப் பிடுங்கிய

இந்த மீசை

விடுதலை வீரர்களைக்

கவிதையால் இணைத்த

காலத்திற்கு முந்திய இணையதளம்



விடுதலை, வீரம், காதல்

கடவுள், குழந்தைகள், குயில் எனப்

பல்சுவை படைப்புகள் தந்த

பண்டைய செயற்கைக்கோள் தொலைகாட்சி



அல்லிக்கேணி முதல் அடையார் வரை

குதிரை ரதத்திற்குக் கூட வழியில்லாத குமைச்சலில்

அவன் ஓட்டிய ஞானரத ரூட்டில் தான்

இன்றைய வானரதம் பறக்கும்ரயில் பறக்கின்றது



வாழும் வரையில்

வயிற்றுக்கு ஒரு தம்பிடிகூடக் கொடுக்காமல்

வாய்க்கரிசிபோட்டுவிட்டு

வயசுப் பெண்டுகள் வரன்பார்க்கும் நிகழ்ச்சிகளில் மட்டும்

பாரதி பாட்டு ரெண்டு பாடு என

வாய்கூசாமல் கேட்க்கும் இந்த

வக்கற்ற வர்க்கத்தை என்ன செய்வது,,,,



கரிராஜன் கால்களில்

கவிராஜன் இடறுண்டு

காலனிடம் சென்று சேர்ந்த

கதை பொய்யாய்ப் போகாதோ

அல்லிக்கேணிக் குளத்தருகே உன்னை

அனுதினமும் கண்டு நான்

அளவளாவ மாட்டேனோ?















நடிகர்திலகத்தின் நினைத்துப் பார்க்கமுடியாத கலைநுணுக்கம்

நடிப்புலக மாமேதை சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்" என்று அழைக்கப்பட்டது புது விஷயமல்ல. வரலாறு போற்றும் அவரது பல கதாபாத்திரங்களை வரும் கால தலைமுறை முயற்சி செய்து கொண்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லவரும் விஷயம் யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத மிக நுண்ணியமான அவரது நடிப்பைப் பற்றியது.
கெளரவம் திரைப்படத்தில் "பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி" என்று ஒரு அருமையான பாடல் வரும்.

பாடலைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பாடல் துவங்கும் சமயத்தில்
அவர் கையில் விஸ்கி கோப்பையுடன்பாடஆரம்பிப்பார். மிகுந்த வேதனையும் சுயகர்வமும் கலந்து விறு விறு என்று நடந்து கொண்டே பாட ஆரம்பிப்பார் .
அடுத்த சரணத்தில் கொஞ்சம் விஸ்கி உள்ளே சென்றவுடன் மெதுவாக உடல் அசைவில் மாற்றம் காண்பிக்க தொடங்குவார்.
அடுத்த சரணத்தில் கால்கள் தள்ளாட மாடிப்படியில் இருந்து இறங்கி வருவார்,
கடைசி சரணத்தில் நடக்கக்கூட முடியாமல் சோபாவில் அமர்ந்து மெல்ல மனைவியின் மடியில் படுத்து தூங்க ஆரம்பிப்பது போல் பாடல் முடிந்துவிடும்.







http://www.youtube.com/results?search_query=palooti+valartha+kili&oq=palooti+valartha+kili&aq=f&aqi=&aql=&gs_sm=s&gs_upl=3678l70074l0l75365l111l99l9l72l3l10l18378l144367l0.1.5-1.1.3.2.9l18l0
அவரது பொதுவான மிரட்டும் நடிப்பை விட்டுவிடுங்கள். இந்த அளவிற்கு ஒரு நடிகரால் கதாபத்திரத்தின் உணர்சிகளையும் முகத்தில் கொட்டிக்கொண்டு, பாடலுக்கு மிகச் சரியாக வாயசைத்துக் கொண்டு, ஒரு குடிகாரனின் மெதுவான உடல் தளர்வுகளையும் காட்டிக் கொண்டு அப்படியே திரையில் வாழ்ந்து காட்ட முடியுமா என்ன? சிங்கத் தமிழா...................... நீ உலகம் உள்ளவரை வாழ்வாய் என்பது உண்மை. இப்போது "பாலூட்டி வளர்த்த கிளி" பாடலை கண்டு பரவசமடையுங்கள் .

பரிதாபமிக்க இந்தியர்களே பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள்

அலைக்கற்றை ஊழல் .........

கார்கில் நிலமோசடி............

காமன் வெல்த் ஊழல்..........

ஓ காட்டுமிராண்டி இந்தியர்களே

உலகமகாத் திருடர் தலைவனை

உயிரைக் கொடுத்து அழைத்து வந்திருக்கிறோம்

உள்ளூர் திருடர்களை எல்லாம் மறந்து

ஓ போடுங்கள்.....ஒபாமா வந்துவிட்டார்

பழசையெல்லாம் மறந்து பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள்

பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும்

சொல்லிக் கொடுக்கவா வேண்டும்

பக்குவமாய் நடந்து கொள்வார்கள்

சிகரம் அமைப்பின் சிறப்பான கருத்தரங்கம்

சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சிலர் சேர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் ஊடகவியல் தொடர்பான சிகரம் அமைப்பின் திரு.ஆனந்தபத்மனாபனின் (கலைஞர் டி.வீ) அழைப்பை ஏற்று சென்னை அண்ணாநகரில் நேற்று ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இணையதளத்தில் எப்படி ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்வது என்பது பற்றி மூத்த மக்கள் தொடர்பாளர் திரு.ப்ரயம் பாயின்ட் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகச்சிறப்பான செய்முறை விளக்கத்தை அளித்தார். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் பங்குபெற்ற அந்த கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களுடனான கைபேசி வழியிலான பேட்டி மற்றும் ப.சிதம்பரம் நோக்கி பத்திரிகையாளர் கூட்டத்தில் காலனி வீசிய ஜர்னைல் சிங்கை சூட்டோடு சூடாக அவர் கை பேசி வழியாக பேட்டிஎடுத்து இணையத்தில் ஒளிபரப்பிய முயற்சி ஆகியவை மிக சுவையான அனுபவமாக இருந்தது. இணையதள தொழில் நுட்பங்களை இனிய முகத்தோடு இலவசமாக சொல்லிக்கொடுக்கும் இன்போசிஸ் செல்வா விழாவைச் சிறப்பித்தார். சிகரம் அமைப்பிற்கு பாராட்டுகள். சிகரத்தின் ஆனந்து தொடர்புக்கு: இணையதள ஒலி ஒளிபரப்பு எனப்படும் (9962584170) பற்றிய ஐயப்பாடுகளை களைந்து கொள்ள திரு.சீனிவாசன் அவர்களின் இணையதள முகவரி: www.prpoint.com

மனக் குறுகுறுப்புடன் மகளிர் தின வாழ்த்துக்கள்

பெற்றுப் போட்டவளின் மனத்தைச்
சுட்டுப் பொசுக்கிய பல கணங்கள்

நட்பு பாராட்டிய தோழிகளை புறத்தே
நயமின்றி நக்கலடித்த கணங்கள்

அலுவலகப் பெண் ஊழியர்கள்
அழும் வகையில் நடந்துகொண்ட கணங்கள்

கட்டியவளின் மீது கண்மூடிக்
கை நீட்டிய கணங்கள்

பெற்ற மகளை உள்ளத்தில்
பாரமாய்க் குமுறிய கணங்கள்

தலை முறைகள் ரத்தத்தில்
தைத்து விட்டுப் போன ஆண் என்ற அகம்பாவம்

அத்தனையும் தாண்டி அன்போடு
மகளிர் தின வாழ்த்துச் சொல்ல
மனம் குறுகுறுக்கிறது

மாற விரும்பும் மனது
கொஞ்சம் உள்ளம் மறைத்து
நடிக்க முயன்றால் காறித் துப்பும் மனசாட்சி

இருந்தாலும் மன்னியுங்கள் மகளிரே
மகளிர் தின வாழ்த்துக்கள்.........

நான் ஏன் இனி சந்நியாசி ஆவேன்?

தறிகெட்ட வேகத்தில் பைக்கிலும்
தூரே தளர்ந்து விழும் பூவிதழில்
துல்லியமாய் உன் முகம்

கணினியின் ஒன்று பூஜ்ஜியம்
ஓட்டங்களுக்கு இடையில்
உன் இமைகள் கவிழ்வது துல்லியமாய்

செல்போன் தகவல் சிதறிய
அலைகளுக்கு நடுவில்
உன் அலையாடும் கூந்தல் துல்லியமாய்

பிக்சல்கள் ரங்கோலி விளையாடும்
படத் தொகுப்பு ஆச்சர்யங்களில்
உன் பட்டுக் கன்னங்கள் துல்லியமாய்

வேறெதுவும் தெரியவில்லை ஆதலால்
அணுக்களின் தொகுப்பு இவ்வுலகம்
என்ற அத்வைதம் புரிந்தது......

காமம் செத்துக் காதல் நிறைந்ததால்
நான் ஏன் இனி சந்நியாசி ஆவேன்?



எம்.எஸ்.வியின் ஹை-வே இசையும், கவியரசரின் கண்ணீர் வரிகளும்

நாற்பத்தியேழு நாட்கள் என்று ஒரு படம். அதிகம் படிப்பறிவில்லாத ஒரு அபலைப் பெண் ஏற்கனவே மணமான ஒரு வெளிநாடு வாழ் தமிழனால் ஏமாற்றி தாலி கட்டப் பட்டு பாரீசில் படாத பாடு பட்டு ஒரு நல்ல மனிதனால் காப்பாற்றப் பட்டு தமிழ் நாடு திரும்புவதாகக் கதை (சிவசங்கரியின் கதை). தான் ஏமாற்றப் பட்டதை முற்றிலும் புரிந்து கொண்டு பாரீசிலிருந்து எப்படியாவது தப்பி தமிழ் நாடு வந்து சேரவேண்டும் என்று வழி தெரியாமல் பாடாய்ப் படும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும் (மான் கண்ட சொர்க்கங்கள், காலம் போகப் போக யாவும் வெட்கங்களே). mellisai மன்னர் இசை அமைத்து கவியரசர் எழுதிய அந்தப் பாடல் இசையிலும் வரிகளிலும் காலத்தை வென்ற ஒரு படைப்பாகும். அந்தக் காலகட்டத்தில் தான் தாள வாத்தியக் கருவியான ரோட்டோ என்ற ஒரு ட்ரம்ஸ் வாத்தியக் கருவி அறிமுகமாகியிருந்தது. ஏழெட்டு வட்டவடிவமான ட்ரம்ஸ் கருவிகள் வரிசையாகப் பொருத்தப்பட்டு (இப்போதைய கம்ப்யூட்டர் ரிதம் பெடிற்கு மானுவல் thaththaa athu) anthak கருவியை மட்டும் தாள vaaththiyap பின்னணியாக வைத்து மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார் அந்தப் பாடலில். அனேக வெளிநாடு வாழ் தமிழர்கள் இப்போதும் அங்கே ஏதாவது ஹை வேக்களில் காரில் இந்தப் பாடலை ஓடவிட்டால் எப்படி ஐயா மெல்லிசைமன்னர் இப்படி ஒரு கருவி இசை இந்தப் பாடலுக்கு அமைத்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எழும். திக்குத் தெரியாமல் பாஷை தெரியாத வெளிநாட்டில் கலங்கித் தவிக்கும் அபலைப் பெண்ணின் மனவோட்டமாக வரும் அந்தப் பாடலில் கண்களை கண்ணீர்க் கடலில் மூழ்கடிக்கும் ஒரு வரியை எழுதியிருப்பார் கவியரசர். "தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது" என்ற அந்த வரியில் நமது கள்ளமில்லாத் தாய்மார்கள் தமது குழந்தைகளுடன் கோவிலுக்குச் செல்வதும் அவர்களுக்கு சாமி கதைகளைச் சொல்லி பிரச்சனைகள் வரும் போது நம் குலதெய்வத்தை மனத்தால் கூப்பிடு உதவிக்கு ஓடிவரும் என்று நம்பிக்கை ஊட்டுவதும் நம் கண் முன்னே வரும். நான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபப் பட்டதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ததில்லை. ஆனாலும் இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் அவர்கள் நினைவு என் நெஞ்சை அழுத்தி கண்களில் கண்ணீர் தெறிக்கும் என்பது மட்டும் உண்மை.