தமிழகத்தில் இந்துமதத்தைக் காத்தது தந்தைப் பெரியாரும், திராவிட இயக்கமுமே.

தமிழகத்தில் இந்துமதத்தைக் காத்தது தந்தைப் பெரியாரும், திராவிட இயக்கமுமே.



இந்தக் கட்டுரை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பற்றியது அல்ல. மேலும் இது எந்த மதங்களைப் பற்றிய விமர்சனமும் அல்ல. முழுக்க முழுக்க சூழ்நிலை மற்றும் காலத்தை பொறுத்த ஒரு அலசலே. (மதத்திற்கும் சாதிக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எமனாய் வந்த தந்தைப் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் ஒரு சிறிதும் அவமரியாதை செய்யும் நோக்கம் சத்தியமாக இல்லை)


வெள்ளைக்காரர்கள் காலத்தில் எல்லா துறைகளிலும் கோலோச்சியிருந்த பிராமணர்களின் வருணாசிரம தர்மத்திற்கு கட்டுப்பட்டு சமூகத்தில் பலவிதங்களில் இழிநிலையிலிருந்த பல சமூகத்தவரும் முதலில் மத ரீதியிலான அங்கீகாரமும் சமூக கௌரவமும் வேண்டி மிஷனரிகளின் அரவணைப்பின் கீழ் கிருத்துவ மதத்திற்கு மாறத் தொடங்கினர். இதே சமயத்தில் அவர்களுக்கு நாராயண குரு போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகள் மதரீதியிலான சமூக கௌரவமும், அங்கீகாரமும் பெறுவதற்கு போராடினாலும் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் பெற முடியாத சூழல் நிலவிவந்தது. இந்த நிலையில் தான் அகில இந்திய அளவில் அண்ணல் அம்பேத்காரும், தமிழகத்தில் சுயமரியாதை வேண்டி காங்கிரசிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும் பெருவாரியான மக்களின் சமூக முன்னேற்றம், அரசியல் விடுதலை மற்றும் சுயமரியாதைக்ககப் போராடினார்கள் . தந்தை பெரியாரிடம் அரசியல் இலக்கணம் பயின்ற அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாயிலாக அரசியல் வெற்றி கண்டு சமூக நீதியை நிலைநாட்டும் பல சட்டங்களை கொண்டு வந்து பல சமூகத்தினரும் தத்தமது மதங்களிலேயே மரியாதையும் சமூக அங்கீகாரமும் பெறமுடியும் வழிவகை செய்து கொடுத்தனர். இதன் காரணமாக சமூக அங்கீகாரம் வேண்டி மதம் மாறும் முடிவில் இருந்த பல சாதிப் பிரிவினர் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். ஆக பெருவாரி மக்களை உள்ளடக்கி ஆனால் ஒரு சிறு பிரிவினரால் கட்டுப் படுத்தப் பட்டு வந்த இந்துமதம் தமிழகத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அடிப்படையில் பெரும் பாதிப்பிற்குள்ளாகாமல் காக்கப்பட்டது.

எது உண்மையான சென்னை ? ஏனிந்த மாயை?

ஆங்கிலேயர் காலத்திற்கு முன் பல சிறு கிராமங்களாக இருந்த சென்னப்பட்டினம்,  பல நூற்றாண்டுகளாக வியாபார நிமித்தமாகவும், அரசு நிர்வாக நிமித்தமாகவும் தற்போதைய சென்னையின் பாரிஸ் மற்றும் கோட்டைப் பகுதிகளை ஒட்டியே தலைமைப் பகுதியாக விளங்கி வந்தது, அதனை ஒட்டியே அந்தப் பகுதிகளைச் சுற்றி குடியிருப்புகள் பெருகின. தொழில்புரட்சியின் காரணமாக அம்பத்தூர், தாம்பரம் (ஸ்டாண்டர்ட்மோட்டார்,பின்னி,  கிரோம்பேட் தோல்  நிறுவனங்கள்) போன்ற 
பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு குடியிருப்புகள் பெருகத் தொடங்கின.  பின்னர் கணினித்  தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக ஈ.சீ.ஆர், ஒ.எம்.ஆர் போன்ற பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு புதிய குடியிருப்புகள் புற்றீசல்கள் போலக் கிளம்பி பெருகி வருகின்றன.  திருப்பெரும்புதூர் பகுதியில் ஆட்டோ தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் அந்தப் பகுதியை ஒட்டி பெரும் குடியிருப்புகள் பெருகிவிட்டன. இந்த நிலையில் உண்மையில் நிலமதிப்பின் அடிப்படையில் டிமான்ட் மற்றும் அதிக விலை உடைய  இடங்கள் என்பவை  எது தான்.  பரவலாக சென்னை  மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உண்மையிலேயே ஒரு சராசரி நிலமதிப்பு என்ன என்பது பற்றி விற்பன்னர்கள் யாராவது விளக்கமான பதிவு போட்டால் அவர்களுக்கு கோடி புண்ணியம் சேரும்.  ப்ளீஸ் யாராவது செய்யுங்களேன்.

"சாமியார் தம்பிக்குப் பிடி வாரண்ட்

(தலைப்பைப் பார்த்ததும் ஏதோ இப்போது நடந்த சமாச்சாரம் என்று நீங்கள் குழம்பிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல . இது தந்தைப் பெரியாரால் "என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதி. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்கள் புதியதல்ல எல்லாமே ரிப்பீட்டு தான் என்பது மட்டும் புரிகிறது.)






ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1908 ஆம் வருஷமாய் இருக்கலாம். எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷை (பிட்சை) நடத்துகிறார்கள் என் தகப்பனாரும் ரூபாய் 50 கொடுத்தார் . பெரிய சமாராதனை நடக்கிறது அந்தச்சாமியார் தம்பி ஒரு மைனர். கடன்காரன். அவனும் கூட வந்திருந்தான். அந்த மைனர் எங்கள் ஊரில் ஒரு வியாபாரிக்கு கடன் பாக்கி கொடுக்கவேண்டும். அது கோர்டில் டிக்ரி ஆகி இருந்தது அந்த சமயம் அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய் பிடி போட்டு வாரண்ட் கொண்டு வரச் சொன்னேன். உடனே நிறைவேற்ற விண்ணப்பம் போட்டு அன்றே வாரண்டு வந்தது. மறுநாள் பகல் மணிக்கு வாரண்டு எடுத்துக்கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூடிக்கொண்டு எங்கள் ஊரில் சாமியார் இறங்கியிருந்த "எல்லயப்பர் சத்திரம்" என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்திரத்திற்குப் பக்கத்தில் வெளியில் நான் நின்று கொண்டு சாமியார் தம்பிக்கு ஆள் அனுப்பினேன். உள்ளே இருந்து அவர் ரோட்டுக்கு வந்தார். சேவகனுக்குக் கைகாட்டி "இவர் தான்" என்று சொன்னேன். சாமியார் தம்பி, வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே போனேன். திமிறிவிட்டு சட்டென்று வீட்டுக்குள் புகுந்து வெளிக்கதவைத் தாழிட்டுக்கொண்டான். நான் உடனே தூணைப்பிடித்து தாழ்வாரத்தின் மீது ஏறி ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப்பக்கம் வீட்டிற்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து வீதிக் கதவைத் திறந்து விட்டு சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து சேவகனிடம் ஒப்புவித்தேன். அந்த மைனர் திமிறினான். என் கடை ஆட்கள் சில பேர்கள் அங்கிருந்தவர்களை "இவனைப் பிடித்து வெளியில் தூக்கிக் கொண்டு போங்கள்" என்று சொன்னேன். (அற்புதமான நகைச்சுவை நடையில் இந்தக் கட்டுரையின் மற்ற விஷயங்களையும் அந்த மாமனிதரின் மற்ற மகத்துவம் பொருந்திய கருத்துக்களையும் வாங்கிப் படியுங்கள்)

சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பாரதி திருவிழாவில் நான் வாசித்த கவிதை

சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பாரதி திருவிழாவில் நான் வாசித்த கவிதை
 (மிகச்சிறப்பான டிபன், லஞ்ச், கவியரங்கத்தில் கவிதைவசித்த அனைவருக்கும் பொன்னாடை (அது இரண்டு வரியாக இருந்தாலும் சரி, இரண்டு கிலோவாக இருந்தாலும் சரி)

தலைப்பு : அல்லிக்கேணிக் குளத்தருகே உனைக்கண்டு அளவளாவ மாட்டேனோ?



நெல்லைச் சீமையிலே

கூடங்குளத்திற்கு கொள்ளைக்காலத்திற்கு முன்பே

எட்டையபுரத்தில் எகிறிக்குதித்த அணுவுலை பாரதி

அவன் கவிதைக் கதிர்வீச்சு பரங்கியைப் பஸ்பமாக்கியது

காதல் கதிர்வீச்சோ பாப்பன அக்கிரகாரங்களையே

அவனைப் பகிஷ்கரிக்கவைத்தது



பாரதி...அவன் பார்வை தீ..

படிப்பவர்களை அடிமைகளாக்கும் ரதி..

தமிழில் அவன் பாதி

விட்டுச் சென்றது தான் மிச்சம் மீதி

அதிலும் எம்போல் எச்சம் கோடி.....



வெள்ளையனின் பியூசைப் பிடுங்கிய

இந்த மீசை

விடுதலை வீரர்களைக்

கவிதையால் இணைத்த

காலத்திற்கு முந்திய இணையதளம்



விடுதலை, வீரம், காதல்

கடவுள், குழந்தைகள், குயில் எனப்

பல்சுவை படைப்புகள் தந்த

பண்டைய செயற்கைக்கோள் தொலைகாட்சி



அல்லிக்கேணி முதல் அடையார் வரை

குதிரை ரதத்திற்குக் கூட வழியில்லாத குமைச்சலில்

அவன் ஓட்டிய ஞானரத ரூட்டில் தான்

இன்றைய வானரதம் பறக்கும்ரயில் பறக்கின்றது



வாழும் வரையில்

வயிற்றுக்கு ஒரு தம்பிடிகூடக் கொடுக்காமல்

வாய்க்கரிசிபோட்டுவிட்டு

வயசுப் பெண்டுகள் வரன்பார்க்கும் நிகழ்ச்சிகளில் மட்டும்

பாரதி பாட்டு ரெண்டு பாடு என

வாய்கூசாமல் கேட்க்கும் இந்த

வக்கற்ற வர்க்கத்தை என்ன செய்வது,,,,



கரிராஜன் கால்களில்

கவிராஜன் இடறுண்டு

காலனிடம் சென்று சேர்ந்த

கதை பொய்யாய்ப் போகாதோ

அல்லிக்கேணிக் குளத்தருகே உன்னை

அனுதினமும் கண்டு நான்

அளவளாவ மாட்டேனோ?















நடிகர்திலகத்தின் நினைத்துப் பார்க்கமுடியாத கலைநுணுக்கம்

நடிப்புலக மாமேதை சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்" என்று அழைக்கப்பட்டது புது விஷயமல்ல. வரலாறு போற்றும் அவரது பல கதாபாத்திரங்களை வரும் கால தலைமுறை முயற்சி செய்து கொண்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லவரும் விஷயம் யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத மிக நுண்ணியமான அவரது நடிப்பைப் பற்றியது.
கெளரவம் திரைப்படத்தில் "பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி" என்று ஒரு அருமையான பாடல் வரும்.

பாடலைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பாடல் துவங்கும் சமயத்தில்
அவர் கையில் விஸ்கி கோப்பையுடன்பாடஆரம்பிப்பார். மிகுந்த வேதனையும் சுயகர்வமும் கலந்து விறு விறு என்று நடந்து கொண்டே பாட ஆரம்பிப்பார் .
அடுத்த சரணத்தில் கொஞ்சம் விஸ்கி உள்ளே சென்றவுடன் மெதுவாக உடல் அசைவில் மாற்றம் காண்பிக்க தொடங்குவார்.
அடுத்த சரணத்தில் கால்கள் தள்ளாட மாடிப்படியில் இருந்து இறங்கி வருவார்,
கடைசி சரணத்தில் நடக்கக்கூட முடியாமல் சோபாவில் அமர்ந்து மெல்ல மனைவியின் மடியில் படுத்து தூங்க ஆரம்பிப்பது போல் பாடல் முடிந்துவிடும்.







http://www.youtube.com/results?search_query=palooti+valartha+kili&oq=palooti+valartha+kili&aq=f&aqi=&aql=&gs_sm=s&gs_upl=3678l70074l0l75365l111l99l9l72l3l10l18378l144367l0.1.5-1.1.3.2.9l18l0
அவரது பொதுவான மிரட்டும் நடிப்பை விட்டுவிடுங்கள். இந்த அளவிற்கு ஒரு நடிகரால் கதாபத்திரத்தின் உணர்சிகளையும் முகத்தில் கொட்டிக்கொண்டு, பாடலுக்கு மிகச் சரியாக வாயசைத்துக் கொண்டு, ஒரு குடிகாரனின் மெதுவான உடல் தளர்வுகளையும் காட்டிக் கொண்டு அப்படியே திரையில் வாழ்ந்து காட்ட முடியுமா என்ன? சிங்கத் தமிழா...................... நீ உலகம் உள்ளவரை வாழ்வாய் என்பது உண்மை. இப்போது "பாலூட்டி வளர்த்த கிளி" பாடலை கண்டு பரவசமடையுங்கள் .

பரிதாபமிக்க இந்தியர்களே பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள்

அலைக்கற்றை ஊழல் .........

கார்கில் நிலமோசடி............

காமன் வெல்த் ஊழல்..........

ஓ காட்டுமிராண்டி இந்தியர்களே

உலகமகாத் திருடர் தலைவனை

உயிரைக் கொடுத்து அழைத்து வந்திருக்கிறோம்

உள்ளூர் திருடர்களை எல்லாம் மறந்து

ஓ போடுங்கள்.....ஒபாமா வந்துவிட்டார்

பழசையெல்லாம் மறந்து பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள்

பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும்

சொல்லிக் கொடுக்கவா வேண்டும்

பக்குவமாய் நடந்து கொள்வார்கள்

சிகரம் அமைப்பின் சிறப்பான கருத்தரங்கம்

சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சிலர் சேர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் ஊடகவியல் தொடர்பான சிகரம் அமைப்பின் திரு.ஆனந்தபத்மனாபனின் (கலைஞர் டி.வீ) அழைப்பை ஏற்று சென்னை அண்ணாநகரில் நேற்று ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இணையதளத்தில் எப்படி ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்வது என்பது பற்றி மூத்த மக்கள் தொடர்பாளர் திரு.ப்ரயம் பாயின்ட் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகச்சிறப்பான செய்முறை விளக்கத்தை அளித்தார். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் பங்குபெற்ற அந்த கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களுடனான கைபேசி வழியிலான பேட்டி மற்றும் ப.சிதம்பரம் நோக்கி பத்திரிகையாளர் கூட்டத்தில் காலனி வீசிய ஜர்னைல் சிங்கை சூட்டோடு சூடாக அவர் கை பேசி வழியாக பேட்டிஎடுத்து இணையத்தில் ஒளிபரப்பிய முயற்சி ஆகியவை மிக சுவையான அனுபவமாக இருந்தது. இணையதள தொழில் நுட்பங்களை இனிய முகத்தோடு இலவசமாக சொல்லிக்கொடுக்கும் இன்போசிஸ் செல்வா விழாவைச் சிறப்பித்தார். சிகரம் அமைப்பிற்கு பாராட்டுகள். சிகரத்தின் ஆனந்து தொடர்புக்கு: இணையதள ஒலி ஒளிபரப்பு எனப்படும் (9962584170) பற்றிய ஐயப்பாடுகளை களைந்து கொள்ள திரு.சீனிவாசன் அவர்களின் இணையதள முகவரி: www.prpoint.com